பொள்ளாச்சி கமலாபுரத்திலிருந்து பழனி வரை பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு நடை பாதை அமைக்கப்படும் என்று மத்திய நெடுஞ்சாலை துறை அமைச்சர் வி கே சிங் தெரிவித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பழனியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் அலுவலகம் திறக்கப்பட்டது. இதை சாலை போக்குவரத்து துறை அமைச்சர் வி கே சிங் திறந்து வைத்தார். அப்போது வெற்றிவேல் வீரவேல் என்று முழக்கமிட்டபடி திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பழனிக்கு வருவதில் மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும், கோவை மாவட்டம் பொள்ளாச்சி கமலாபுரத்தில் இருந்து பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு தனி நடை பாதை அமைத்துக் கொடுக்கப்படும் என்று அவர் கூறினார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து பாரதிய ஜனதா கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுவது மிகவும் நல்ல விஷயம். மக்களுக்கு சிறந்த திட்டங்களை வழங்குவதில் அதிமுக சிறப்பு பங்காற்றி வருகின்றது. பல தலைவர்கள் மக்களுக்கு சிறந்த திட்டங்களை செய்து வருகின்றனர். விவசாயம், எரிவாயு, இலவச வீடு, கழிப்பறை ,முத்ரா கடன் திட்டம் பல நல்ல திட்டங்களை செய்து வருகின்றனர் என்று அவர் தெரிவித்தார்.