காரில் கொண்டுவரப்பட்ட 1232 வெள்ளி பொருட்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சேலம் மாவட்டத்திலுள்ள வேம்பூர் கூட்டு ரோடு பகுதியில் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அவ்வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி அவர்கள் சோதனை செய்துள்ளனர்.
அதில் 1232 வெள்ளி பொருட்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து அதிகாரிகள் காரை ஓட்டி வந்த சசிகுமார் என்பவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அவர் இந்த வெள்ளி பொருட்கள் கும்பகோணத்திற்கு விற்பனை செய்வதற்காக எடுத்துச் செல்லப்படுகிறது என்று கூறியுள்ளார். ஆனால் வெள்ளி பொருட்களுக்கு உரிய ஆவணம் இல்லாததால் அவை அனைத்தும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு விருதாச்சலம் ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த வெள்ளிப் பொருட்களின் விலை சுமார் 28 லட்சம் என கூறப்படுகிறது.