ஐசிசி கோப்பையை பகிர்ந்து அளித்திருக்க வேண்டும் என்று நியூசிலாந்து தலைமை பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்
ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பரபரப்பான உலக கோப்பை இறுதி போட்டியில் இங்கிலாந்து – நியூசிலாந்து அணிகள் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் மோதியது. இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 241 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணியும் 241 ரன்கள் எடுத்ததால் ஆட்டம் டை ஆனது. பின்னர் முதல் முறையாக உலக கோப்பையில் சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது. அத்துடன் முடியாமல் சூப்பர் ஓவரிலும் இரு அணிகளும் 15 ரன்கள் எடுத்தது. ஐசிசி விதிப்படி அதிக பவுண்டரிகள் அடித்த அடிப்படையில் இங்கிலாந்து அணி கோப்பையை வென்றது. இங்கிலாந்து அணி முதல்முறையாக கோப்பையை கைப்பற்றியது.
இதனையடுத்து அதிக பவுண்டரிகளின் அடிப்படையில் கோப்பையை இங்கிலாந்து அணியிடம் ஐசிசி வழங்கியதற்கு முன்னாள் மற்றும் இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களது விமர்சனத்தை தெரிவித்தனர். ரசிகர்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் கோப்பையை வென்றது இங்கிலாந்து அணியாக இருக்கலாம் இதயங்களை வென்றது நியூசிலாந்து தான் என்று விமர்சனத்தை முன் வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், நியூசிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் கேரி ஸ்டீட் ஈஎஸ்பிஎன் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தபோது, ஐசிசி இரு அணிகளுக்கும் கோப்பையை பகிர்ந்து அளித்திருக்க வேண்டும். சூப்பர் ஓவர் விதிகள் மட்டுமின்றி இன்னும் பல விஷயங்களை ஆராய்ந்து அதனை மாற்ற வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.