காஞ்சிபுரத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி 93 பேர் துப்பாக்கிகளை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதி முறையின்படி துப்பாக்கிகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அல்லது அருகில் உள்ள காவல்நிலையத்தில் ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பின் படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், முன்னாள் போலீஸ் அதிகாரிகள் என மாவட்டம் முழுவதிலும் 162 பேருக்கு துப்பாக்கி பயன்படுத்த உரிமம் வழங்கப்பட்டுள்ளது.
இதில் 93 பேர் துப்பாக்கிகளை காவல்நிலையத்தில் ஒப்படைத்ததாக மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. மீதம் உள்ளவர்கள் விரைவில் துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது. ஒப்படைக்கவில்லை என்றால் துப்பாக்கிகள் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்படும் என்றும் காவல்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.