பெண்ணை தாக்கிய வாலிபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரியலூர் மாவட்டத்திலுள்ள நாகமங்கலம் கிராமத்தில் மலர் என்பவர் வசித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் உதயகுமார். இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று உதயகுமாரும் அவருடைய உறவினரான கோவிந்தராசும் அருகில் உள்ள பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அங்கு வந்த மலர் கோவிந்தராசுவிடம் உங்களுடைய உறவினரான சேகர் இறைச்சி வாங்கியதில் எனக்கு பாக்கி தரவேண்டும் என கூறியுள்ளார்.
அப்போது அருகில் நின்று கொண்டிருந்த உதயகுமார் என் தந்தை எப்போது இறைச்சி வாங்கினார் நீங்கள் பொய் சொல்கிறீர்கள் என்று மலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அந்த சமயத்தில் உதயகுமார் மலரின் சாதிப் பெயரைச் சொல்லித் திட்டி அதன்பின் தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து உதயகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.