நாகையில் வருகின்ற சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கும் விதமாக கிராம மக்கள் வீடுகளில் கருப்புக் கொடியை ஏற்றியுள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழவேளூர் பகுதியில் சென்ற 2008-ம் ஆண்டு வாழஒக்கூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் தனியார் ஆலை அமைப்பதற்காக கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து வாழஒக்கூர் பகுதியில் இருக்கும் இளைஞர்களுக்கு வேலை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் பல வருடங்களாகியும் எந்த வேலை வாய்ப்பும் இதுவரை இளைஞர்களுக்கு வழங்கப்படவில்லை. மேலும் நிலக்கரி துகள்கள் காற்றில் பரவி சுவாசப் பிரச்சனை ஏற்படுவதை தடுக்க வேண்டும் என்றும், அந்த நிறுவனத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்ததை திரும்பப் பெற வேண்டும் என்றும், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் பல கோரிக்கைகளை இந்த கிராம மக்கள் முன் வைத்துள்ளனர். மேலும் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்திற்கு நிலம் கொடுத்ததன் காரணமாக 27 வருடங்களாக தொடர்ந்து பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிரந்தர வேலை வழங்க உத்தரவிட்டும் நிரந்தர பணி வழங்கப்படவில்லை.
ஒரு வருடமாக ஊதியமும் வழங்கப்படவில்லை. ஊதியம் இல்லாமல் கஷ்டப்படும் குடும்பத்தினருக்கு எந்த இழப்பீடும் இதுவரை வழங்கவில்லை. இதுபோன்ற எந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படாத நிலையில் வருகின்ற சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்கும் விதமாக அந்த கிராமத்திலுள்ள மக்கள் தங்கள் வீடுகளில் கருப்புக் கொடியை கட்டியுள்ளனர். நாகை மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயருக்கு இது குறித்து எண்ணை சுத்திகரிப்பு நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் கோபுராஜபுரம், பனங்குடி, உத்தமசோழபுரம், பூதங்குடி, பனங்குடி, நரிமணம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்களும் மனு அளித்துள்ளனர். மேலும் வருகின்ற சட்டமன்ற தேர்தலை நரிமணம், பனங்குடி, கோபுராஜபுரம், உத்தமசோழபுரம், பூதங்குடி ஆகிய கிராமங்களும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளதாக அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.