பிரத்யேக இருசக்கர வாகனத்தில் மாற்றுத்திறனாளியை அமரவைத்து கலெக்டர் ஓட்டி சென்ற சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மதுரை மாவட்டத்திலுள்ள ஆனையூர் பகுதியில் காளிமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மாரீஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு பழனிகுமார் என்ற மாற்றுத்திறனாளி மகன் உள்ளார். இதனால் மரிஸ்வரி தனது மகனை எப்போதும் வெளியே அழைத்துச் செல்லும்போது இடுப்பில் சுமந்து சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கலெக்டர் அலுவலகத்திற்கு சென்ற மாரீஸ்வரி மகனை தன் இடுப்பில் சுமந்து செல்வதால் ஒரு வாகனம் வழங்குமாறு மனு கொடுத்துள்ளார். இதனை அடுத்து கலெக்டர் அன்பழகன் அந்த மனுவை படித்துவிட்டு அம்மா இருசக்கர வாகன நிதி உதவி திட்டத்தின் கீழ் வாகனம் வழங்கப்படும் என மாரீஸ்வரியிடம் தெரிவித்துள்ளார்.
அப்போது என்னால் பணம் கட்டி வாகனம் வாங்க இயலாத நிலைமை உள்ளது என மாரீஸ்வரி கலெக்டரிடம் கூறியுள்ளார். இந்நிலையில் அமரக்கூடிய வகையில் இருக்கையை உடன் கூடிய பிரத்தியேக இருசக்கர வாகனத்தை மாற்றுத்திறனாளி இளைஞருக்கு கலெக்டர் தனது சொந்த செலவில் வாங்கிக் கொடுத்துள்ளார். அதன்பின் மாற்றுத்திறனாளி இளைஞரை அந்த வாகனத்தில் அமரவைத்து அவரது கால்களை தனது இடுப்பை பிடித்தவாறு அவரை வெளியே அழைத்து சென்றுள்ளார். அந்த சமயம் தனது மகிழ்ச்சியை மாற்றுத் திறனாளி இளைஞர் வெளிப்படுத்திய சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும் கலெக்டரின் இந்த செயலை அங்கிருந்த அனைவரும் பாராட்டியுள்ளனர்.