தமிழக அரசால் வழங்கப்படும் புத்தகப் பைகள் கொண்டு வந்த கண்டெய்னர் லாரியை பழைய கலெக்டர் அலுவலகத்திற்கு செல்ல காவல்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.
தஞ்சை மாவட்டத்தில் உள்ள பழைய கலெக்டர் அலுவலகம் முன்பாக ஒரு கண்டெய்னர் லாரி வந்து நின்றுள்ளது. அந்த லாரி வெகுநேரமாக அங்கேயே நின்றதால் சந்தேகமடைந்த அப்பகுதியினர் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலின் பேரில் அவர்கள் அங்கு வந்து லாரியை ஓட்டி வந்த டிரைவரிடம் சர்வே நடத்தியுள்ளனர். அதில் அந்த லாரி அரியானா மாநிலத்தில் இருந்து வந்தது என தெரியவந்துள்ளது.
அந்த லாரியில் தமிழக அரசால் பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படும் இலவச புத்தகங்கள் இருந்துள்ளது. அந்த லாரியில் உள்ள ஆவணங்களை வாங்கி பார்த்தபோது அது அனைத்தும் சரியாக இருந்ததால் கலெக்டர் அலுவலகத்திற்குள் அந்த லாரியை அவர்கள் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு திரண்ட தி.மு.க வினர் லாரிக்குள் பணம் இருப்பதாக கூறி அதை திறந்து சோதனை செய்தால் மட்டுமே நாங்கள் உள்ளே அதை அனுமதிப்போம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனால் லாரியில் இருந்த மூட்டைகள் தி.மு.க வினர் முன்னிலையில் இறக்கப்பட்டு பிரித்து பார்க்கப்பட்ட பின்னரே அவைகள் கலெக்டர் அலுவலகத்திற்குள் லாரியை அனுமதித்துள்ளனர். அதன்பின் புத்தகபைகள் அனைத்தும் அலுவலகத்தில் உள்ள ஒரு அறையில் வைக்கப்பட்டு அந்த அறை மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது.