மயிலாடுதுறையில் குப்பைகளுக்கு வைக்கப்பட்ட தீயால் ரூபாய் 50 ஆயிரம் மதிப்புள்ள வாழைகள் தீயில் எரிந்து நாசமாகின.
மயிலாடுதுறை மாவட்டத்தில் தருமபுரம் ஆதீனம் அருகில் நந்தவன தோட்டம் ஒன்று உள்ளது. அந்தத் தோட்டத்தை பாலகுரு என்பவர் 7 ஏக்கர் அளவில் குத்தகைக்கு எடுத்து சாகுபடி செய்து வருகிறார். அந்த தோட்டத்தில் 10,000 வாழைகள் சாகுபடி செய்துள்ளார். மேலும் அந்த தோப்பில் வாழை தார்கள் பயிர் அறுவடைக்காக வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நந்தவனத்தை சுற்றி குப்பைகள் கொட்டபட்டு இருந்தது. அந்த குப்பைகளை சிலர் தீயிட்டு கொளுத்தி உள்ளனர். அதிலிருந்து வந்த தீ வாழை இலை சருகுகள் மீது பரவியுள்ளது.
இதையடுத்து இலைசருகுகள் மளமளவென எரிய ஆரம்பித்தது. இந்த தீ வாழை முழுவதும் பரவியது. இதனால் பத்தாயிரம் வாழைகளும் கருகி சாம்பல் ஆனது. அதனை கண்ட பறக்கும்படை தாசில்தார் விஜயராகவன் இது குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் அளித்தார். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் கொழுந்துவிட்டு எரிந்த தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தால் ரூபாய் 50 ஆயிரம் மதிப்புள்ள வாழைகள் சேதம் அடைந்துள்ளன.