காரைக்குடியில் வாகன சோதனையின் போது 32 மது பாட்டில்கள் மற்றும் ரூ.83 ஆயிரத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி பல்வேறு இடங்களில் பறக்கும் படையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பரிசு பொருள்கள், கணக்கில் வராத பணம், மதுபான பாட்டில்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காரைக்குடி பகுதியில் உள்ள சோதனைச்சாவடியில் பறக்கும் படை அலுவலர் நேரு தலைமையில் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது காரைக்குடிக்கு, திருப்பத்தூர் அருகே எஸ்.எஸ்.கோட்டையில் இருந்து கார் ஒன்று வந்தது.
அதை தடுத்து நிறுத்திய அதிகாரிகள் அந்த காரில் சோதனை மேற்கொண்டனர். அப்போது உரிய ஆவணம் இல்லாமல் ரூ.83 ஆயிரம் கொண்டு செல்வது தெரியவந்தது. இதையடுத்து பறக்கும் படையினர் அந்த பணத்தை பறிமுதல் செய்து மாவட்ட கருவூலகத்தில் ஒப்படைத்துள்ளனர். மேலும் காரைக்குடிக்கு, சென்னையிலிருந்து வந்த தனியார் ஆம்னி பேருந்தில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அதில் சுந்தரம் என்பவரிடமிருந்து ஆவணங்கள் இல்லாமல் 32 மதுபாட்டில்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.