உலக அளவில் ஒவ்வொரு வருடமும் 930 மில்லியன் டன் அளவிற்கு உணவு வீணடிக்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. ஒருவரால் உணவின்றி கட்டாயம் வாழ முடியாது. அவ்வாறு உயிர்வாழ உதவும் உணவுக்கு சிலர் முக்கியத்துவம் தருவதில்லை. ஆனால் சிலர் தினம்தோறும் ஒரு வேளை உணவு கூட இல்லாமல் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். நம் உலகில் அதிக அளவு உணவுகள் வீணடிக்க படுகின்றன. இதுபற்றி ஐநா சமீபத்தில் மேற்கொண்ட ஆய்வில் மக்கள் உணவுகளை அதிக அளவில் வீணடிப்பது தெரியவந்துள்ளது. உலக அளவில் ஆண்டுக்கு 17 சதவிகிதம் உணவு வீணடிக்க படுவதாகவும், அதில் அதிகபட்சமாக 61% வீட்டில் தயாரிக்கப்படும் உணவுகளே வீணாவதாக ஐநா அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.
மேலும் ஆண்டுக்கு ஒரு தனிநபர் சராசரியாக சுமார் 74 கிலோ உணவை வீணடிப்பதாக தெரியவந்துள்ளது. தனி மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம் என்ற பாரதியின் வரிகளுக்கு ஏற்ப வறுமையை ஒழிக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் முயற்சி செய்து வரும் நிலையில், உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 930 மில்லியன் டன் அளவிற்கு உணவு வீணடிக்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இனிமேல் யாரும் உணவை வீணடிக்காமல் இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுங்கள்