தனுஷ்கோடியில் வனத்துறை மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டன.
தனுஷ்கோடி சுற்றுவட்டார பகுதிகளான எம்.ஆர் சத்திரம், கம்பிப்பாடு உள்ளிட்ட இடங்களில் ஆமைகள் இட்டு சென்ற 9327 முட்டைகள் வனத்துறை மூலம் சேகரிக்கப்பட்டு, எம்ஆர் சத்திரம் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள கடல் ஆமை முட்டை குஞ்சு பொரிப்பகத்தில் பாதுகாப்பாக புதைத்து வைக்கப்பட்டன.
52 நாட்களுக்கு பிறகு முட்டையிலிருந்து வெளிவந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆமை குஞ்சுகள் ராமநாதபுரம் மாவட்ட வன உயிரின காப்பாளர் மற்றும் மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின காப்பக அதிகாரிகள் தலைமையில் தனுஷ்கோடி கடலில் விடப்பட்டன. கடற்கரை மணலில் விடப்பட்ட ஆமை குஞ்சுகள் அனைத்தும் மெல்ல மெல்ல நகர்ந்து கடலுக்கு சென்றன.
ஆமை குஞ்சுகள் கடலில் விடப்பட்டதை ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டு களித்தனர். மேலும் தாழ்வுபாடு, பாறையடி, ஒற்றைத் தாளி உள்ளிட்ட 9 இடங்களில் 950 கடல் ஆமை முட்டைகள் சேகரிக்கப்பட்டு பொறிப்பகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.