திண்டுக்கல்லில் நடைபயிற்சிக்கு சென்ற துணை பதிவாளர் ரயில் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளம்பட்டி பகுதியில் அடைக்கலம் என்பவர் வசித்து வந்தார். இவருக்கு தங்கபாண்டிய ராணி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். அடைக்கலம் துணை பதிவாளராக காந்திகிராம பல்கலைக்கழக வளர்ச்சி பிரிவில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருடைய மூத்த மகளுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. இரண்டாவது மகளுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு காதல் திருமணம் பெற்றோர்கள் சம்மதத்துடன் நடத்தி வைக்கப்பட்டுள்ளது. அடைக்கலம் தினமும் காலைப்பொழுது நடைபயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில் சம்பவத்தன்று காலை 6:30 மணிக்கு நடைபயிற்சிக்காக சென்றுள்ளார். காந்திகிராம பல்கலைக்கழகம் அருகே உள்ள தண்டவாள பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்ட போது தண்டவாளத்தை கடக்க முயற்சி செய்தபோது எதிர்பாராதவிதமாக ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே அடைக்கலம் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த திண்டுக்கல் ரயில்வே காவல் துறையினர் அடைக்கலத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.