பிரிட்டனில் பிரேசில் வகை உருமாறிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பெண்ணை சுகாதாரத்துறை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.
பிரேசிலில் பரவி வரும் உருமாறிய P1 என்ற கொரோனா வைரஸ் பிரிட்டனிலும் பரவி வருவதாக தகவல் வெளியானது. மேலும் அந்த வைரஸினால் 6 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 5 பேரை சுகாதாரத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்து தனிமைப்படுத்தியுள்ளனர். ஆனால் கடந்த வார ஞாயிற்றுக்கிழமை பிரேசில் வகை உருமாறிய வைரசால் பாதிக்கப்பட்ட ஒருவரை மட்டும் அடையாளம் காண முடியவில்லை என்று சுகாதார அதிகாரிகள் கூறியிருந்தனர்.
மேலும் அவர் தனிமைபடுத்துதலுக்கு உட்படுத்தப்படாமல் இருந்திருந்தால் அவரால் பல பேர் வைரஸினால் பாதிக்கப்படும் நிலை உருவாகும் என்பதால் அதிகாரிகள் பிரேசில் வகை வைரஸால் பாதிக்கப்பட்ட அந்த நபரை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் பிரிட்டன் சுகாதார செயலாளர் Matt Hancock கடந்த வெள்ளிக்கிழமை அந்த நபர் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறினார்.
உருமாறிய பிரேசில் வகை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட அந்த பெண் தெற்கு லண்டனில் உள்ள Croydon என்ற பகுதியில் தங்கி இருப்பதாக கூறினார். இதனால் அந்த பகுதியில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பெண்ணிடம் விசாரித்ததில் இதுவரை நான் வீட்டை விட்டு வெளியே எங்கும் செல்லவில்லை என்று கூறியுள்ளார்.மேலும் அவரிடமிருந்து மற்றவர்களுக்கு வைரஸ் பரவியதற்கான அடையாளங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.