கர்நாடக மாநிலத்திற்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சோமநாயக்கன்பட்டி ரயில்வே நிலையத்தில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு 3 டன் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக ரகசிய தகவல் ஒன்று வருவாய் துறையினருக்கு கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் வருவாய் துறை அதிகாரிகள் இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் ரயில்வே நிலையத்திற்கு சென்றுள்ளனர். அங்கு நடைமேடை ஓரம் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 3 டன் ரேஷன் அரிசி வருவாய் துறையினர் கண்டுள்ளனர்.
இதனையடுத்து அதிகாரிகளை கண்டதும் கடத்தல்காரர்கள் ஆத்திரமடைந்து ரயில் நிலையத்தை விட்டு வெளியேறி அதிகாரிகள் வந்த இருசக்கர வாகனத்தில் ஒன்றை அடித்து நொறுக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். அதன்பின் ரயில்வே நிலைய நடைமேடை அருகில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்து தாசில்தார் அலுவலகத்திற்கு சரக்கு ஆட்டோ மூலம் கொண்டு சென்றுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கடத்தல்காரர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.