டிரைவிங் லைசன்ஸ் புதுப்பித்தல் மற்றும் பழகுநர் உரிமம் உள்ளிட்ட 18 வகையான சேவைகளை ஆன்லைன் மூலமாக பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டிரைவிங் லைசன்ஸ் புதுப்பித்தல் மற்றும் பழகுநர் உரிமம் போன்ற சேவைகளை ஆன்லைன் மூலம் பெறலாம் என்ற தகவலை சாலை போக்குவரத்துக்கு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில் பழகுநர் உரிமம், ஓட்டுநர் உரிமம் புதுப்பிப்பு, டூப்ளிகேட் டிரைவிங் லைசன்ஸ், ஓட்டுநர் உரிமம், ஆர்சி புக்கில் முகவரி மாற்றுதல், சர்வதேச அளவில் ஓட்டுநர் உரிமத்துக்கு அனுமதி, வாகன உரிமத்தை ஒப்படைத்தல், வாகனத்துக்குத் தற்காலிகமாகப் பதிவெண் பெற விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழுமையாகக் கட்டமைக்கப்பட்ட வாகனத்துக்குப் பதிவெண் பெற விண்ணப்பித்தல், வாகனத்துக்கு டூப்ளிகேட் பதிவெண் பெற விண்ணப்பித்தல், என்ஓசி சான்றிதழ் பெற விண்ணப்பித்தல், வாகனத்தின் உரிமையாளரை மாற்றுவதற்கு விண்ணப்பித்தல், வாகன ஆர்சி புத்தகத்தில் முகவரியை மாற்றுவது குறித்து விண்ணப்பித்தல் போன்ற சேவைகளை ஆன்லைனில் பெறலாம். அதுமட்டுமின்றி அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுநர் பயிற்சிப்பள்ளியில் பயிற்சி பெற விண்ணப்பம் பதிவு செய்யலாம்.
உயர் அதிகாரிகளுக்கு வாகனத்தைப் பயன்படுத்தப் பதிவு செய்ய விண்ணப்பித்தல், வாகனத்தை வாடகைக்கு எடுப்பது தொடர்பான ஒப்பந்தத்தைப் பதிவு செய்தல், வாகனத்தை வாடகைக்கு எடுத்த காலம் முடிந்தபின் ஒப்பந்தத்தை ரத்து செய்தல், வாகனத்தின் உரிமத்தை மாற்றுவது குறித்து விண்ணப்பித்தல், தூதரக அதிகாரிகள் பயன்படுத்தும் வாகனங்களுக்கு புதிய வாகன பதிவெண் பெற விண்ணப்பித்தல் உள்ளிட்ட 18 வகையான சேவைகளுக்கு ஆர்.டி.ஓ அலுவலகம் செல்லாமல் ஆதார் மூலமாக ஆன்லைனில் பெறக்கூடிய விவரங்களை மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது.