டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்ற பெண்களின் புகைப்படம் பிரபல இதழின் அட்டைப்படத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்வேறு தரப்பினரும் விவசாயிகளின் இந்த போராட்டத்தை ஆதரித்து வரும் நிலையில் நூறு நாட்கள் நடைபெற்ற இப்போராட்டத்தில் 20க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கின்றனர்.
மேலும் விவசாயிகளிடம் அரசின் பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. தலைநகர் டெல்லியில் திக்ரி, காஜிபூர், சிங்கு போன்ற எல்லைப்பகுதிகளில் விவசாயிகள் டிராக்டர்களில் தங்கி கடும் குளிர், மழை, வெயில் போன்ற அனைத்தையும் பொறுத்துக்கொண்டு போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
மேலும் சட்டங்களை திரும்பப்பெறப்படும் வரை போராட்டத்தை தொடருவோம் என்று தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அமெரிக்காவில் பிரபலமான டைம் என்ற பத்திரிகையில் மார்ச் மாத இதழின் அட்டையில் டெல்லியில் திக்ரியில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற பெண்களின் புகைப்படம் இடம்பெற்றிருக்கிறது.
மேலும் விவசாயிகள் போராட்டத்திற்கான முன்னணி வீரர்கள் என்று அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஏற்கனவே உச்ச நீதிமன்றம் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என்று அறிவுறுத்தியிருந்தது. அதனையும் மீறி போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்களின் புகைப்படத்தை டைம் இதழ் தங்கள் அட்டைப்படத்தில் வெளியிட்டதால் சர்ச்சைய கிளம்பியுள்ளது.