கோவிலில் பூட்டை உடைத்து பணம் மற்றும் பிற பொருட்களை திருடிச்சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருவரங்குளம் பகுதியில் அமைந்துள்ள பிள்ளையார் கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இந்த கோவில் மிகவும் பழமை வாய்ந்த கோவில் இந்த கோவிலில் நேற்று இரவு பூஜை முடித்த பின்னர் பூசாரி கோவிலை பூட்டி விட்டு சென்றுள்ளார்.
அதன்பின் நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் பூட்டை உடைத்து கோவிலின் உள்ளே புகுந்து உண்டியலை உடைத்து அதில் இருந்த பணம், மைக்செட், இரண்டு குத்துவிளக்குகள், பூஜை பொருட்கள் போன்றவற்றை திருடி சென்றுள்ளனர். அதன்பின் மறுநாள் காலை வழக்கம்போல் பூசாரி கோவிலை திறப்பதற்காக வந்துள்ளார். ஆனால் பூட்டு உடைந்து இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது அங்குள்ள பொருட்கள் திருடு போனது தெரிய வந்துள்ளது.
இதனை அடுத்து அவர் கோவில் நிர்வாகியிடம் தகவல் தெரிவித்துள்ளார். அதன்பின் கோவில் நிர்வாகி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.