மானாமதுரை காவல் நிலையத்திற்கு அருகே , நண்பகலில் நடைபெற்ற கொலை சம்பவமானது பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .
சிவகங்கை மாவட்டத்தில், மானாமதுரை பகுதியை சேர்ந்த வினோத்ராஜ் , மணி என்ற இருவர் மீதும் காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்கள் இருவரும் கடந்த மாதம், மானாமதுரை நீதிமன்றத்திற்கு எதிரில் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த மர்ம கும்பல் இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டி, அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதில் மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உயிருடன் இருந்த வினோத் ராஜ் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் பெற்று வந்துள்ளார்.
ரவுடிகளிடையே முன்விரோதம் காரணமாக கொலை செய்துள்ளனர், என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கொலையில் தொடர்புடைய ஒன்பதாவது குற்றவாளியாக ஆவாரங்காட்டைச் சேர்ந்த தங்கமணியின் மகன் 23 வயதுடைய அக்னிராஜை கைது செய்து ,பின் அவர் நிபந்தனை ஜாமீன் அடிப்படையில் , தினமும் மானாமதுரை போலீஸ் நிலையத்திற்கு கையெழுத்திட வேண்டும் என்று கூறி, ஜாமீன் வழங்கினர்.
இதனால் அக்னிராஜ் மானாமதுரை காவல் நிலையத்திற்கு கையெழுத்திட்டு வந்துள்ளார்.நேற்று மதியம் 11 மணிக்கு கையெழுத்திட, காவல் நிலையத்திலிருந்து 50 மீட்டர் தொலைவில் இருந்த திருமண மண்டபத்திற்கு அருகில் வந்து கொண்டிருந்தபோது, அங்கே வந்த இருசக்கர வாகனத்தில் ஒன்பது பேர் கொண்ட கும்பலானது அக்னிராஜனை வழிமறித்து உள்ளது. அந்த மர்ம கும்பல் அக்னி ராஜனை சரமாரியாக வெட்டியுள்ளது.
அக்னிராஜ் தப்பியோடிய போது, அந்த கும்பல் இவரை விடாமல் துரத்தி, தலையை வெட்டியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவரை வெட்டிய கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. காவல் நிலையத்திற்கு அருகில், ஆள் நடமாட்டம் அதிகமாக உள்ள இடத்தில் நடந்த இந்த கொலை சம்பவமானது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. அக்னி ராஜனை பழிவாங்க கடந்த மாதம் நடைபெற்ற கொலையோடு ஒப்பிட்டு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.