இந்த டீசருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்ற அதிர்ச்சி தகவலை இயக்குனர் வெங்கட் கிருஷ்ணா ரோஹந்த் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் தற்போது “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற படத்தில் நடித்து வருகிறார். வெங்கட கிருஷ்ணா ரோகாந்த் இப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த படத்திற்கான டீசர் கடந்த மார்ச் 4 ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இந்நிலையில் இந்த டீசர் வெளியிடப்பட்டது எனக்கு தெரியாது என்றும், இதற்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்றும் இயக்குனர் வெங்கட கிருஷ்ணா ரோகாந்த் அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது முகநூல் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,”அன்பார்ந்த பேஸ்புக் நண்பர்களே மன்னிக்கவும்.
நான் இதுவரை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த “யாதும் ஊரே யாவரும் கேளிர்” திரைப்படத்தை இயக்கி வந்தேன்.அப்படத்திற்கான அடுத்தடுத்த ஆப்டேட்டை நான் தவறாமல் பதிவிட்டு வந்தேன். ஆனால் தற்போது வெளியாகியுள்ள டீசர் சம்பந்தமான எந்த தகவலையும் நான் முகநூல் பக்கத்தில் வெளியிடவில்லை.
ஏனென்றால் அந்த படத்திற்கான டீசர் வெளியாகும் தகவல் எனக்கு தெரியாது. மேலும் அந்த டீசருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அந்த டீசர் வெளியான 45 நிமிடங்களுக்கு பிறகு தான் நான் அதை பார்த்தேன். மீண்டும் மன்னிக்கவும். நான் தற்போது வேறு வழியில்லாமல் அந்த டீசரை பற்றி பேசாமல் மௌனமாக கடந்து செல்கிறேன்.
இப்படத்தின் ஆன்மாவை உள்ளங்கையில் காட்டக்கூடிய நான் கட் செய்த டீசர் என்னிடம் உள்ளது. அது டப்பிங் செய்யப்படாமல் ஆர் ஆர் செய்யப்படாமல் தேடி செய்யப்படாமல் உள்ளது. படத்தின் தயாரிப்பு குழுவிடம் இந்தக் குளறுபடிக்கு காரணம் கேட்டுள்ளேன். தக்க பதில் வந்தால் எனது முகநூல் நண்பர்களுக்கு நான் தெரிவிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.