திமுக கூட்டணியில் இருக்கும் மதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைகோ சம்மதம் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது.
அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைத்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த சில நாட்களாகவே அதிமுக பல்வேறு நலத் திட்டங்களை மக்களுக்கு தொடர்ந்து செய்து வருகிறது. மேலும் மக்களை கவரும் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இதனை அடுத்து ஒவ்வொரு கட்சியினரும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பற்றி தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அனைத்து கட்சிகளுக்கும் இடையே தொகுதி பங்கீடு குறித்து இழுபறி நீடித்து வருகிறது. இதனை அடுத்து திமுக கூட்டணியில் மதிமுக கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. மேலும் வைகோ மற்றும் ஸ்டாலின் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். ஆனால் திடீர் திருப்பமாக 6 இடங்களிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட சம்மதம் தெரிவித்து மதிமுக தொண்டர்களுக்கு வைகோ அதிர்ச்சி கொடுத்துள்ளார். வாசுதேவநல்லூர், சாத்தூர், கோவில்பட்டி, மதுராந்தகம், நெய்வேலி, திருச்சி, ஆவடி, அம்பத்தூர், விருதுநகர், சிவகாசி, மதுரை தெற்கு மற்றும் ஈரோடு ஆகிய தொகுதியில் போட்டியிட மதிமுக விருப்பம் தெரிவித்துள்ளது.