தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தவரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நாசரேத் பகுதியில் இயங்கிவரும் ஜவுளிக்கடையில் தலையணை வாங்குவதற்காக வந்த ஒரு வாலிபர் கடையிலிருந்து 9 ஆயிரத்து 400 ரூபாயை திருடி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதுகுறித்து நாசரேத் காவல் நிலையத்தில் கடை உரிமையாளர் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சாயர்புரம் பேருந்து நிலையம் அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரித்ததில், அவர் சாயர் புரம் பகுதியில் வசித்து வரும் பிரபு என்பதும், ஜவுளி கடையில் பணத்தை திருடியது அவர் தான் என்பதும் காவல் துறையினருக்கு தெரிய வந்துள்ளது.
மேலும் காவல் துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு மளிகைக்கடையில் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது சிறிய திருட்டுகளில் ஈடுபட்டு வந்ததாக கூறியுள்ளார். இவர் நாசரேத் மற்றும் காயல்பட்டினம் போன்ற பகுதிகளில் உள்ள கடைகளில் பணத்தை திருடிச் சென்றுள்ளார். இதனையடுத்து இந்த வாலிபர் கடந்த 2015ஆம் ஆண்டு ஏ.டி.எம்-மில் பணம் எடுத்து வந்த பெண்ணிடம் இருந்து 6 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்ற குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டவர் என்பது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பிரபுவை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.