தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் தேமுதிக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேமுதிக நிர்வாகி கூறியுள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது.
அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைத்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த சில நாட்களாகவே அதிமுக பல்வேறு நலத் திட்டங்களை மக்களுக்கு தொடர்ந்து செய்து வருகிறது. மேலும் மக்களை கவரும் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இதனை அடுத்து ஒவ்வொரு கட்சியினரும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பற்றி தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து அதிமுகவுடனான தொகுதிப் பங்கீட்டில் இழுபறி இல்லை என பேச்சுவார்த்தைக்கு பிறகு பேட்டியளித்த தேமுதிக நிர்வாகி பார்த்தசாரதி கூறியுள்ளார். முதலில் 41 இடங்கள் கேட்டோம். தற்போது 23 தொகுதிகள் வரை இறங்கி வந்துள்ளோம். ஒரு ராஜ்யசபா சீட் தருவதாக உறுதியளித்துள்ளனர். நாளை அல்லது நாளை மறுநாள் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று தெரிவித்துள்ளார்.