மானாமதுரையில் பட்டப்பகலில் மர்ம கும்பல் ஒன்று வாலிபரை சரமாரியாக வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆவாரங்காட்டு பகுதியில் தங்கமணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அக்னிராஜ் என்ற மகன் உள்ளார். இவர் சென்ற மாதம் அந்த பகுதியில் நடந்த கொலையில் 9-வது குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று காவல் நிலையத்தில் ஆஜர் கையெழுத்து போடுவதற்காக அக்னிராஜ் சென்றுள்ளார். அப்போது 50 மீட்டர் தொலைவில் காவல்நிலையத்திற்கு அருகில் அவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் அக்னிராஜை வழிமறித்து உள்ளனர்.
மேலும் அப்பகுதி வழியாக சென்று கொண்டிருந்த மக்களை அரிவாளை காட்டி மிரட்டியுள்ளனர். இதையடுத்து கையில் வைத்திருந்த அரிவாளால் அக்னிராஜை துரத்தி ஓட ஓட சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் ரத்தவெள்ளத்தில் மிதந்த அக்னிராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பட்டப்பகலில் காவல் நிலையம் அருகில் நடந்த இந்த கொலையால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். சென்ற மாதம் நடந்த கொலைக்கு பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று காவல்துறையினர் கூரியுள்ளனர். மேலும் இந்த கொலை குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.