காஞ்சிபுரத்தில் ஷேர் ஆட்டோக்கள் நேருக்கு நேர் மோதி கொண்டதில் தாய்-மகள் இருவரும் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மேட்டுகந்தூர் பகுதியில் மோகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கண்ணகி என்ற மனைவியும், ஜனனி என்ற மகளும் இருந்தனர். ஜனனி பத்தாம் வகுப்பை அதே பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ஜனனிக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது தாய் ஜனனியை சுங்குவார்சத்திரத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார்.
மருத்துவமனைக்கு இருவரும் ஷேர் ஆட்டோ ஒன்றில் சென்றுள்ளனர். அந்த ஷேர் ஆட்டோ மதுரமங்கலம் சாலை சோகண்டி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த ஷேர் ஆட்டோ மீது வேகமாக மோதியுள்ளது. அதில் கண்ணகி சென்ற ஷேர் ஆட்டோ சாலை அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் கண்ணகி உடல் நசுங்கிய நிலையில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதில் ஜனனிக்கு மோசமான காயங்கள் ஏற்பட்டு உயிருக்கு போராடிய நிலையில் கிடந்துள்ளார். அதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் ஜனனியை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சுங்குவார்சத்திரம் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.