Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

முன்னுக்கு பின் முரணாக பதில்…. அதிரடி சோதனையில் சிக்கியவை…. விசாரணையில் வெளிவந்த உண்மை…!!

பறக்கும் படையினர் 60 கிலோ எடை கொண்ட சாமி சிலைகளை காரில் கொண்டு வந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற உள்ளதால் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்த அதிகாரிகள் 50 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம் மற்றும் பரிசுப் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மன்னரை குளத்துப்பாளையம் பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது அவ்வழியாக சென்ற பெங்களூரு பதிவு எண் கொண்ட ஒரு காரை அதிகாரிகள் நிறுத்தி சோதனை செய்தபோது, அந்த காருக்குள் சாமி சிலைகள் இருந்ததை கண்டுபிடித்தனர். இதுகுறித்து காரில் இருந்த இரண்டு பேரிடம் பறக்கும் படை அதிகாரிகள் விசாரணை நடத்திய போது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அந்த காரையும் சாமி சிலைகளையும் பறிமுதல் செய்து திருப்பூர் ஆர்.டி.ஓ ஜெகநாதனிடம் ஒப்படைத்து விட்டனர்.

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த வடக்கு காவல் துறையினர் காரில் பயணித்த இரண்டு பேரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் பெங்களூரு ஜலகள்ளி பகுதியில் வசித்து வரும் சையத் அகமது என்பதும், மற்றொருவர் அதே பகுதியில் வசிக்கும் ரமேஷ் என்பதும் காவல்துறையினருக்கு தெரிய வந்துள்ளது. இவர்கள் வெண்கலத்தாலான ராதை, கண்ணன், சிவன் சிலை மற்றும் பீடம், மணி இரண்டு அலங்கார வளைவுகள் என 60 கிலோ எடை கொண்ட சிலைகளை காரில் கொண்டு சென்றுள்ளனர்.

மேலும் இவர்கள் காவல்துறையினரிடம் பெங்களூருவில் இந்த சாமி சிலைகளை சையத் அகமது வாங்கி தனது காரில் வைத்துள்ளதாகவும், இந்த சிலைகளுக்கு பாலீஷ் போடுவதற்காக திருப்பூருக்கு கொண்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவர்களை கைது செய்த காவல் துறையினர்  தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |