தேர்தல் நேரத்தில் வாக்காளர்கள் மற்றும் அரசியல் கட்சி தொண்டர்களுக்கு கொடுப்பதற்காக கள்ளச்சாராயம் காய்ச்சியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் மதுவிலக்கு காவல்துறையினருக்கு மூலனூர், கும்பம் பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர் கள்ளச் சாராயம் காய்ச்சிக் கொண்டிருந்த பாலசுப்பிரமணியன் என்பவரை மடக்கிப் பிடித்து விட்டனர். இதனையடுத்து காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடி சோதனையில் 20 லிட்டர் கள்ளச்சாராயம், கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக தயார் செய்யப்பட்ட 400 லிட்டர் ஊறல் போன்றவை பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர் அதனை அழித்து விட்டனர். இதுகுறித்து காவல்துறையினர் பாலசுப்பிரமணியனிடம் நடத்திய விசாரணையில், தேர்தல் நேரத்தில் வாக்காளர்கள், அரசியல் கட்சி தொண்டர்கள் ஆகியோருக்கு சப்ளை செய்வதற்காக இந்த சாராயம் காய்ச்சப்படுவதாக தெரிவித்துள்ளார். இதனை அறிந்த காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர் ஏற்கனவே கொரோனா கால கட்டத்தின் போது டாஸ்மாக் கடை மூடப்பட்டு இருந்ததால் கள்ளச்சாராயம் காய்ச்சி வினியோகம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.