சிவகங்கை கீழடியில் பழங்கால பானை ஓடுகளின் குவியல்கள் அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழர்களின் பாரம்பரியங்களை உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில் கீழடியில் 6 கட்டங்களாக அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதில் 6-ம் கட்ட அகழ்வாராய்ச்சி நிறைவு பெற்றது. இந்நிலையில் 7-வது கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கான பணிகள் அகரத்திலும், கொந்தகையிலும் துவங்கப்பட்டுள்ளன. இந்த கீழடி ஆய்வில் ஒன்பது குழிகள் தோண்ட அளவீடு செய்யப்பட்டு அதில் ஒரு குழி மட்டும் தோண்டி பணிகள் நடைபெற்று வருகின்றது.
2 அடி ஆழத்தில் தோண்டியபோது சில்லு வட்டுக்கள், பாசிமணிகள், பானை ஓடுகள் ஆகியவை கிடைத்துள்ளது. அதன்பின் மண் மூடிகள், மண்ணாலான கூம்பு வடிவ கிண்ணம் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது 4 அடி ஆழமாக தோண்டப்பட்ட போது கருங்கற்கள், ஓடுகளின் குவியல்கள், கரித்துகள்கள் போன்றவை கிடைத்து வருகின்றது. தொடர்ந்து ஆழமாக குழிகள் தோண்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் குழிகள் தோண்டும் போது பொருட்கள் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்று தெரியவந்துள்ளது. இதே போல் கொந்தகையிலும், அகரத்திலும் குழிகள் தோண்டப்பட்டு அகழ்வாராய்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது.