கள்ளக்காதல் விவகாரத்தில் பெண்ணை எரித்து கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள பைக்காரா பகுதியில் ஆனந்தகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மனைவியை பிரிந்து வாழ்ந்த ஆனந்தகுமாருக்கும், அப்பகுதியில் கணவரை இழந்து வசித்து வரும் ஆயிஷா என்ற பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறி விட்டது. இதனை அடுத்து ஆயிஷா வேறு ஒரு நபருடன் பழகுவதை அறிந்த ஆனந்தகுமார் ஆயிஷாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது கோபமடைந்த ஆனந்தகுமார் திடீரென ஆயிஷா மீது மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்து விட்டார். இதில் படுகாயமடைந்த ஆயிஷாவை அருகில் உள்ளவர்கள் மீட்டு ஊட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
அதன்பின் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட ஆயிஷாவுக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரித்துள்ளனர். இந்த வழக்கானது ஊட்டி மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றுள்ளது. மேலும் ஆயிஷா கோவையில் சிகிச்சை பெற்றபோது நீதிபதியிடம் மரண வாக்குமூலம் அளித்துள்ளார். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆயிஷாவை தீ வைத்து எரித்த குற்றத்திற்காக ஆனந்த குமாருக்கு ஆயுள் தண்டனையும், இவருக்கு ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார்.