நேற்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின், திருச்சி – சிறுகனூரில் தமிழகத்தின் ‘விடியலுக்கான முழக்கம்’ என்ற பெயரில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேருரையாற்றினார். அப்போது, இந்த ஆட்சிக்கு ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி முற்றுப்புள்ளி வைக்கப்பட இருக்கிறது. மே 2-ஆம் நாள் தமிழகத்தின் புதிய விடியலுக்கான அழகிய பூபாளமாக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி அமைய இருக்கிறது.
அப்படி அமைய இருக்கும் ஆட்சி, தந்தை பெரியார் விரும்பிய சமூகநீதி ஆட்சியாக – பேரறிஞர் அண்ணாவின் மாநில சுயாட்சியின் ஆட்சியாக – முத்தமிழறிஞர் கலைஞரின் நவீன மேம்பாட்டு ஆட்சியாக – பெருந்தலைவர் காமராசரின் கல்வி வளர்ச்சி ஆட்சியாக – தோழர் ஜீவா விரும்பிய சமத்துவ ஆட்சியாக – அமையும்! இத்தகைய ஆட்சியை எப்படி கொண்டு செலுத்துவது என்பதற்காக, ஒரு தொலைநோக்குத் திட்டத்தை நான் வடிவமைத்துள்ளேன்.கழக முன்னணி நிர்வாகிகள் – தமிழகத்தின் சிந்தனையாளர்கள் – பல்துறை வல்லுநர்கள் ஆகியோரிடம் கலந்துபேசி இந்தத் திட்டத்தை உருவாக்கியுள்ளேன்.
தமிழகத்தின் மிக முக்கியமான ஏழு துறைகளை முழுமையாகச் சீரமைத்து – வளர்த்தெடுப்பதையே எனது முதல் பணியாகக் கருதுகிறேன்.எனது அரசு முன்னுரிமை வழங்கவிருக்கும் பத்தாண்டு இலக்கை, இந்த மாபெரும் கூட்டத்தின் வாயிலாக தமிழக மக்களுக்கு அறிவிப்பதில் பெருமைப்படுகிறேன்! இந்த உறுதிமொழிகளுக்கு ‘ஸ்டாலினின் ஏழு உறுதிமொழிகள்’ என்று பெயர் சூட்டி உள்ளேன்! இந்த இலக்குகள் – வளமான- ஏற்றத்தாழ்வற்ற தமிழகத்தை உருவாக்கிடத் தேவையான 7 முக்கிய துறைகள் சார்ந்தது! –
1. பொருளாதாரம்
2. வேளாண்மை
3. நீர்வளம்
4. கல்வி மற்றும் சுகாதாரம்
5. நகர்ப்புற வளர்ச்சி
6. ஊரக உட்கட்டமைப்பு
7. சமூகநீதி
இவை அனைத்தும் முக்கியமானவை என்பதை நீங்கள் அனைவரும் ஒப்புக் கொள்வீர்கள்!
* வளரும் வாய்ப்புகள், வளமான தமிழ்நாடு!
* மகசூல் பெருக்கம், மகிழும் விவசாயி!
* குடிமக்கள் அனைவருக்கும் குறையாத தண்ணீர்!
* அனைவருக்கும் உயர்தரக் கல்வி மற்றும் உயர்தர மருத்துவம்!
* எழில்மிகு மாநகரங்களின் மாநிலம்!
* உயர்தர ஊரகக் கட்டமைப்பு, உயர்ந்த வாழ்க்கைத் தரம்!
* அனைவருக்கும் அனைத்துமான தமிழகம்!
– இந்த இலக்குகளை எட்டியாக வேண்டும்!
இந்த இலக்குகளை எப்படி அடையவிருக்கிறோம் என்பதை விரிவாகச் சொல்ல விரும்புகிறேன்.
1. பொருளாதாரம்
* வளரும் வாய்ப்புகள் – வளமான தமிழ்நாடு!
அடுத்த பத்தாண்டுகளுக்குள் இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை எட்டுவது முதல் இலக்கு. இதனை நாம் சாதித்துவிட்டால், நமது பொருளாதாரம் ரூபாய் 35 இலட்சம் கோடியைத் தாண்டும். இதன் விளைவாக, தனிநபர் வருமானம் ஆண்டுக்கு ரூபாய் 4 இலட்சத்துக்கும் மேலாக உயரும். அந்த நிலையை நம்மால் நிச்சயம் எட்ட முடியும்.
வேலைவாய்ப்புகளைப் பொறுத்தவரை, ஒவ்வொரு ஆண்டும் 10 இலட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம். தற்போதுள்ள வேலைவாய்ப்பின்மை விகிதத்தை சரிபாதியாகக் குறைப்போம்.
பொருளாதாரரீதியாக நலிவடைந்து, கடும் வறுமையில் வாடும் 1 கோடி மக்களை அடுத்த பத்தாண்டுகளுக்குள் மீட்கப் போகிறோம். இதன் மூலம், வறுமைக்கோட்டுக்குக் கீழ் ஒருவர் கூட இல்லாத முதல் மாநிலமாகத் தமிழகத்தை உருவாக்குவோம். அதற்கான பணியை எனது தலைமையிலான தி.மு.க. அரசு நிறைவேற்றப் போகிறது.
2. வேளாண்மை
* மகசூல் பெருக்கம், மகிழும் விவசாயி!
தமிழ்நாட்டின் நிகர பயிரிடு பரப்பு இப்போது 60 விழுக்காடாக இருக்கிறது. கூடுதலாக 11.75 இலட்சம் ஹெக்டேர் பயிரிடச் செய்து, இதனை 75 விழுக்காடாக உயர்த்தும் இலக்கை பத்தாண்டுகளுக்குள் எட்ட இருக்கிறோம்.
தமிழ்நாட்டில் தற்போது 10 இலட்சம் ஹெக்டேர் அளவுக்கு இருபோக நிலங்கள் உள்ளன. இதனை அடுத்த பத்தாண்டுகளுக்குள் இருமடங்காக, அதாவது 20 இலட்சம் ஹெக்டேராக உயர்த்தவுள்ளோம்.
உணவு தானியங்கள் மற்றும் தேங்காய், பருத்தி, சூரியகாந்தி, கரும்பு ஆகிய பணப்பயிர்களுக்கான வேளாண் ஆக்கத்திறனில் முதல் மூன்று இடங்களுக்குள் தமிழகத்தை இடம்பிடிக்கச் செய்வதற்கான நடவடிக்கைகளை அடுத்த பத்தாண்டுகளில் செய்வோம்.
3. நீர்வளம்
* குடிமக்கள் அனைவருக்கும் குறையாத தண்ணீர்!
தனிநபர் பயன்பாட்டுக்கான தண்ணீர் இருப்பை ஆண்டுக்கு 9 இலட்சம் லிட்டரில் இருந்து 10 இலட்சம் லிட்டராக உயர்த்தி வழங்க உறுதி பூண்டுள்ளோம்.
நாளொன்றுக்கு வீணாகும் தண்ணீர் அளவினை 50 விழுக்காட்டிலிருந்து 15 விழுக்காடாகக் குறைப்பதற்கான பணிகளை மேற்கொள்ளவிருக்கிறோம்.
மறுசுழற்சி செய்து பயன்படுத்தப்படும் நீரின் விகிதத்தை 5 விழுக்காட்டிலிருந்து 20 விழுக்காடாக உயர்த்தவுள்ளோம்.
தமிழ்நாட்டின் பசுமைப் பரப்பளவை 20.27 விழுக்காட்டிலிருந்து 25 விழுக்காடாக உயர்த்தும் வகையில் 7.5 இலட்சம் ஹெக்டேர் நிலங்களைக் கூடுதலாக இணைக்கவுள்ளோம்.
4. கல்வி மற்றும் சுகாதாரம்
* அனைவருக்கும் உயர்தரக் கல்வி மற்றும் உயர்தர மருத்துவம்!
மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இருந்து தற்போது கல்வி மற்றும் சுகாதாரத்துக்காகச் செலவிடப்பட்டு வரும் நிதி அளவை, மூன்று மடங்கு உயர்த்தப் போகிறோம்.
கற்றல் வெளிப்பாட்டுக்கான அளவீட்டில் தமிழ்நாடு தற்போது 17-ஆவது இடத்தில் உள்ளது. இந்த நிலையை மாற்றி, முதல் 10 இடங்களுக்குள் தமிழகத்தை இடம்பெறச் செய்யும் வகையில் கல்வித் தரத்தை உயர்த்துவோம்.
பள்ளிக் கல்வியில் மாணவர்களின் ஒட்டுமொத்த இடைநிற்றல் விகிதம், 16 விழுக்காட்டிலிருந்து 5 விழுக்காட்டிற்கும் கீழாகக் குறைக்கப்படும்.
அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் முன்மாதிரிப் பள்ளிகளையும், முன்மாதிரி மருத்துவமனைகளையும் அமைக்கப் போகிறோம். இதனால் அதிக தொலைவு பயணிக்காமல், கைக்கெட்டும் தொலைவில் தரமான கல்வியும் மருத்துவமும் அனைவருக்கும் இலவசமாகக் கிடைக்கும்.
தற்போது நம் மாநிலத்திலுள்ள மருத்துவர்கள் – செவிலியர்கள் – துணை மருத்துவர்கள் மற்றும் பிற தொழிற்கல்விப் பட்டதாரிகளின் எண்ணிக்கையை இருமடங்காக உயர்த்தவுள்ளோம்.
5. நகர்ப்புற வளர்ச்சி
* எழில்மிகு மாநகரங்களின் மாநிலம்!
நகர்ப்புறப் பகுதிகளில் உள்ள 36 இலட்சம் வீடுகளுக்குப் புதிதாகக் குடிநீர்க் குழாய் இணைப்பு வழங்கப் போகிறோம். இதன் மூலம் குடிநீர் இணைப்பு பெற்ற நகர்ப்புற வீடுகளின் அளவு 35 விழுக்காட்டிலிருந்து 75 விழுக்காடாக உயரும்.
அனைத்து நகர்ப்புறப் பகுதிகளிலும் திடக்கழிவு மேலாண்மை அமைப்பு ஏற்படுத்தப்படும்.
குடிசைப் பகுதிகளில் வாழ்ந்து வரும் மக்களுக்குப் புதிதாக 9.75 இலட்சம் கான்கிரீட் வீடுகளைக் கட்டித் தரவுள்ளோம். இதன் மூலம் குடிசைவாழ் மக்களின் அளவு 16.6 விழுக்காட்டிலிருந்து 5 விழுக்காட்டுக்கும் கீழாகக் குறைக்கப்படும்.
நாட்டின் தலைசிறந்த 50 மாநகரங்களின் பட்டியலில் தற்போது 11 மாநகரங்கள் இடம் பெற்றுள்ளன. 2031-க்குள் இப்பட்டியலில் தமிழ்நாட்டில் இருந்து 15 மாநகரங்களை இடம்பெற வைப்போம்.
6. ஊரக உட்கட்டமைப்பு
* உயர்தர ஊரகக் கட்டமைப்பு, உயர்ந்த வாழ்க்கைத் தரம்!
தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் இப்போது 57 விழுக்காடு கான்கிரீட் வீடுகள் உள்ளன. நாம், அடுத்த பத்தாண்டுகளில் 20 இலட்சம் கான்கிரீட் வீடுகளைப் புதிதாகக் கட்டித்தந்து இதனை 85 விழுக்காடாக உயர்த்த இருக்கிறோம்.
கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர்க் குழாய் இணைப்பு வழங்கும் பெரும்பணியைப் பத்தாண்டுகளில் நிறைவேற்றிக் காட்டுவோம்.
எந்த வானிலைக்கும் அசைந்து கொடுக்காத, தரமான சாலை இணைப்புகளையும், வடிகால் அமைப்புகளையும் ஊரகப் பகுதிகளில் கட்டமைப்போம்.
எல்லா கிராமங்களிலும் அகன்ற அலைக்கற்றை இணைய வசதியை – பிராட்பேண்ட் ஏற்படுத்தித் தரவுள்ளோம்.
பத்தாண்டுகளுக்குள் குறைந்தது, தமிழகத்தின் 50 விழுக்காடு கிராமங்களில் திடக்கழிவு மேலாண்மை அமைப்பினைச் செயல்படுத்திக் காட்டுவோம்.
7. சமூகநீதி
* அனைவருக்கும் அனைத்துமான தமிழகம்!
நாளை மார்ச் 8. மகளிர் தினம். தலைவர் கலைஞர் ஆட்சியில் மகளிர்க்கு நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் அனைத்தும் உங்களுக்குத் தெரியும். மகளிர் முன்னேற்றத்திற்காக பெண்களுக்கு சொத்தில் சம உரிமை; வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30 விழுக்காடு – உள்ளாட்சி அமைப்புகளில் 33 விழுக்காடு இடஒதுக்கீடு; மகளிர் சுய உதவிக்குழுக்கள் உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றை மனதில் வைத்துச் சொல்கிறேன்,
தமிழ்நாட்டில் உள்ள குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்க இருக்கிறோம். ரேசன் கடைகளில் உணவுப்பொருட்களைப் பெறும் அனைத்துக் குடும்பங்களும் இதனால் பயனடையும்.
பட்டியலினத்தவர் – பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான கல்வி உதவித்தொகையானது தற்போதுள்ளதை விடவும் இருமடங்கு உயர்த்தி வழங்கப்படும்.
மனிதக் கழிவுகளை மனிதரே அகற்றும் இழிவு முற்றிலுமாக ஒழிக்கப்படும். முழுவதும் தொழில்நுட்ப இயந்திரங்களே இனி இப்பணிக்காகப் பயன்படுத்தப்படும்.
– இவை தான் எனது தொலைநோக்குத் திட்டங்கள்!
இவை அனைத்தும் பத்தாண்டுத் திட்டமாக படிப்படியாக செயல்படுத்தப்படும். 2031-க்குள் நிறைவேற்றப்படும்.
இவை தனிப்பட்ட மு.க.ஸ்டாலினின் திட்டங்கள் மட்டுமல்ல! இந்த திடலில் திரண்டிருக்கும் லட்சக்கணக்கான உடன்பிறப்புகளின் திட்டம் மட்டுமல்ல! இவை தான் கோடிக்கணக்கான தமிழ்நாட்டு மக்களின் திட்டங்களாக மாற வேண்டும்!