நேற்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின், திருச்சி – சிறுகனூரில் தமிழகத்தின் ‘விடியலுக்கான முழக்கம்’ என்ற பெயரில் நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேருரையாற்றினார். அப்போது, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக நான் 2018-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28-ஆம் நாள் தேர்ந்தெடுக்கப்பட்ட போது, “இன்று முதல் இந்த ஸ்டாலின் புதிதாக பிறக்கிறேன்” என்று சொன்னேன்.“இன்று நீங்கள் பார்க்கும் – கேட்கும் மு.க.ஸ்டாலின் ஆகிய நான் புதிதாய் பிறந்திருக்கிறேன். திராவிட முன்னேற்றக் கழகத்தின் மரபணுக்களோடும், நல்ல ஒரு எதிர்காலத்தை உருவாக்கும் கனவுகளோடும் இதோ உங்களுக்கு முன்னால் நான் பிறந்திருக்கிறேன்” என்று சொன்னேன்.
நல்ல ஒரு எதிர்காலத்தை உருவாக்குவதற்கான என்னுடைய கனவுத் திட்டத்தை அறிவிக்கும் இடம்தான் தீரர்களின் கோட்டமாம் இந்தத் திருச்சி மாநகரம்! தமிழ்நாட்டின் நான்கு திசைகளிலும் – எட்டுத் திக்கும் பரவியிருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மான மறவர்கள் கூடியிருக்கும் இந்தக் கூட்டத்துக்கு முன்னால், நான் நிற்கும் போது என்னுடைய உள்ளம் பரவசம் அடைகிறது. பெருமை அடைகிறது. பெரிய நம்பிக்கைப் பிறக்கிறது. நாம் கட்சி தொடங்கியவுடன், வீதியில் பேசிக் கொண்டு இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் சட்டமன்றத்திற்குள் வந்து பேச தைரியம் உண்டா என்று கேள்வி எழுப்பிய போது, நாம் தேர்தலில் நிற்கலாமா வேண்டாமா என்று முடிவெடுப்பதற்காகக் கூடிய இடம் தான் திருச்சி.
நாம் தேர்தலில் நிற்கலாம் என்று உங்களைப் போன்ற கழகத் தொண்டர்கள் அன்று அனுமதி வழங்கியதால், சட்டமன்றத்துக்குள் சென்றோம். ஒரு முறையல்ல; ஐந்து முறை தமிழகத்தை ஆண்டது திராவிட முன்னேற்றக் கழகம்.அதற்கு வழியமைத்துக் கொடுத்தது திருச்சி. அந்த மாநகரத்தில் கூடியிருக்கிறோம்! இதனை மாநாடு என்று நான் அறிவிக்கவில்லை, மாபெரும் பொதுக்கூட்டம் என்றுதான் அறிவித்தேன். ஆனால் கழகத்தின் முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு அவர்களும் மற்ற மாவட்டச் செயலாளர்களும் இதனை மாநாடாகவே நடத்தி விட்டார்கள்.
இதனை ஒரு மாநாடு என்று கூடச் சொல்ல முடியாது. ஐந்து மாநாடு ஒரே நேரத்தில் நடப்பது போல இருக்கிறது. ‘நேரு என்றால் மாநாடு, மாநாடு என்றால் நேரு’ என்று நான் சொல்லி இருக்கிறேன். எதிரியை நேருக்கு நேராக எதிர்ப்பதிலும், நட்பை நெஞ்சுக்கு நெஞ்சாக அரவணைப்பதிலும் நிகரானவர் நேரு என்றும் நான் சொல்லி இருக்கிறேன். இதற்கு மேல் எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.
நேருக்கு நிகர் நேருதான் என்று வேண்டுமானால் சொல்லலாம். அவர் மட்டுமல்ல, இந்த ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி, காடுவெட்டி தியாகராஜன், வைரமணி ஆகிய மூவரும், முப்படைத் தளபதிகளைப் போல வழிநடத்தி வருகிறார்கள். அவர்களுடைய திறமை எவ்வளவு பெரியதென்றால், இந்த மாநாடு அளவுக்கு பெரியதென்றுதான் சொல்ல வேண்டும். அவர்களையும் அவர்களுக்குத் தோளோடு தோள் கொடுத்து பாடுபட்டிருக்கும் தோழர்களையும் பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன்.