ஐந்து மாத ஆண் குழந்தை இறந்ததால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள மணியக்காரர் தோட்டம் பகுதியில் பாரதிராஜா என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு மீனா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சந்தரேஸ் என்ற ஐந்து மாத ஆண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன்பு நுரையீரல் பிரச்சனை காரணமாக கோயம்புத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இந்த குழந்தைக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்து விட்டது. இதனால் கணவன் மனைவி இருவரும் மனமுடைந்து காணப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் வெளியே சென்ற பாரதிராஜா வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது மீனா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கிணத்துக்கடவு காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மீனாவின் தாயார் ராஜேஸ்வரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.