மர்ம நபர்கள் பெரியார் சிலைக்கு தீ வைத்ததால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கத்தாழை மேடு பகுதியில் இருக்கும் சமத்துவபுரத்தில் பெரியார் சிலை ஒன்று உள்ளது. இந்த சிலைக்கு நள்ளிரவில் மர்ம நபர்கள் யாரோ தீ வைத்துள்ளனர். இந்நிலையில் பெரியாரின் வெண்கல சிலைக்கு தீ வைத்த சம்பவத்தை கண்டித்து 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்த தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
அப்போது பெரியார் சிலைக்கு தீ வைத்த மர்ம நபர்கள் யார் என கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதியளித்ததை அடுத்து, அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுவிட்டனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.