பட்டாசு ஆலைகளை பாதுகாக்கும் பொருட்டு விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளை மூட உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள அச்சம் குளம் பகுதியில் இருக்கும் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 24 தொழிலாளர்கள் பலியாகினர். மேலும் காயமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனை அடுத்து காளையர் குறிச்சியில் உள்ள பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்த நிலையில், அதே நாளில் சொக்கலிங்கபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இவ்வாறு பட்டாசு ஆலைகளில் அடுத்தடுத்து விபத்துக்கள் நடந்ததால் மத்திய அரசு அச்சங்குளம் விபத்து குறித்து ஆய்வு செய்ய குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்நிலையில் விதிகளை மீறி செயல்பட்டதாக கூறி 28 பட்டாசு ஆலைகளுக்கு மாவட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
இதனையடுத்து இரண்டு குழுக்கள் அமைத்து சிவகாசியில் உள்ள வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையினர் பட்டாசு ஆலைகளை சோதனை செய்து வெடிபொருட்கள் கட்டுப்பாட்டு விதிகளின் கீழ் 13 ஆலைகளின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்துள்ளனர். அதோடு ஆலைகளில் விதிகளை மீறி செயல்பட்டால் நடவடிக்கை எடுக்கவும், இவ்வாறு அடிக்கடி சோதனை நடத்தவும் அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர். இந்நிலையில் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை நடவடிக்கை மேற்கொண்டு சீல் வைத்த பிறகு திரும்பவும் உரிமம் வாங்க வேண்டும் என்றால் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதனால் மிகுந்த சிரமப்படும் உரிமையாளர்கள் ஆலைகளை பாதுகாக்கும் பொருட்டு இன்று முதல் விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளை மூடுவது என முடிவெடுத்துள்ளனர்.