வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோருக்கு இ-பாஸ் மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டதால், மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன்படி தற்போது வரை பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஊரடங்கு காலகட்டத்தின் போது மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோருக்கு இ பாஸ் கட்டாயம் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், அதனை தமிழக அரசு ரத்து செய்தது. இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு கடந்த ஒரு வாரமாக அதிகரித்து வரும் நிலையில், ஆந்திரா, புதுச்சேரி மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் தவிர்த்து மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு இ பாஸ் கட்டாயம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வரும் அனைவருக்கும் இ-பாஸ் கட்டாயம் என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இ-பாஸ் விண்ணப்பித்தாலும் ஓடிபி கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாக கேரளாவில் இருந்து தமிழகம் வரும் பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர். பயணிகள் எல்லையிலேயே திரும்பி அனுப்பப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் இ-பாஸ் உறுதியானவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.