தமிழக சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது.
அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைத்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த சில நாட்களாகவே அதிமுக பல்வேறு நலத் திட்டங்களை மக்களுக்கு தொடர்ந்து செய்து வருகிறது. மேலும் மக்களை கவரும் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இதனை அடுத்து ஒவ்வொரு கட்சியினரும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பற்றி தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இருக்கும் ஒவ்வொரு கட்சிக்கும் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகின்றன. இதனையடுத்து சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் முதல்வர் பழனிசாமிக்கும் துணை முதல்வர் பன்னீர்செல்வத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் அதிமுக அலுவலகத்தில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளாத முதல்வர், அமைச்சர்களுடன் தனியாக வேட்பாளர் தேர்வு தொடர்பாக ஆலோசித்து வருகிறார் எனவும் கூறப்படுகிறது.