Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

பெரியாரை கடவுளாக நினைத்து குங்குமபொட்டு மாலை அணிவித்தேன்..! விவசாயி வாக்குமூலம்… போலீஸ் கைது..!!

மயிலாடுதுறையில் பெரியார் சிலைக்கு குங்குமபொட்டு வைத்து, மாலை அணிவித்து அவமதித்த விவசாயியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழி பகுதியில் பெரியார் சிலை, போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகில் உள்ளது. இந்த பெரியார் சிலைக்கு காவல்துறையினர் சில மாதங்களுக்கு முன்பு பாதுகாப்பு கூண்டு அமைத்துள்ளனர். இதையடுத்து சென்ற வெள்ளிக்கிழமை அன்று இந்த பெரியார் சிலைக்கு விபூதி, குங்குமம் வைத்து, மாலை அணிவித்து யாரோ சிலையை அவமதித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த சீர்காழி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பெரியார் சிலைக்கு வைக்கப்பட்டிருந்த குங்குமம், விபூதி ஆகியவற்றை அழித்து, மாலையை அகற்றி சிலையை தூய்மை செய்துள்ளனர். இதையடுத்து அங்கு குவிந்த பெரியார் திராவிட கழகத்தினர் பெரியார் சிலையை அவமதித்தவரை உடனடியாக கைது செய்யுமாறு வலியுறுத்தியுள்ளனர்.

பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட புகைப்படம் முகநூலில் வைரலாக பரவி வந்தது. இதையடுத்து பெரியார் சிலையை அவமதித்தவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் சீர்காழி அருகே கொடக்காரமூளை கிராமத்தில் வசித்துவரும் மனோகரன் என்ற விவசாயியை காவல் துறையினர் சந்தேகத்தின் பெயரில் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் மனோகரன் மனஉளைச்சலில் இருந்து வந்ததாகவும், அதனால் பெரியாரை கடவுளாக நினைத்து குங்குமப்பொட்டு வைத்து மாலை அணிவித்ததாக கூறியுள்ளார். இதையடுத்து காவல்துறையினர் மனோகரன் மீது வழக்குப்பதிந்து பின் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |