ஸ்ரீவில்லிபுத்தூரில் இரண்டு அரசு பேருந்துகளை விபத்தில் பலியானோரின் குடும்பத்துக்கு நஷ்டஈடு வழங்காததால் நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள நல்ல குற்றாலம் தெருவில் செந்தில் முத்து என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2014ஆம் ஆண்டு செந்தில் முத்து தனது மனைவி முத்துமாரி என்பவருடன் ராஜபாளையத்தில் இருக்கும் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அதன் பின் கணவன் மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்தபோது, மடவார்வளாகம் பகுதியில் அரசு பேருந்து ஒன்று இவர்களின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதி விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட முத்துமாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். இதனை அடுத்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் செந்தில் முத்து நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் முத்துமாரியின் குடும்பத்தினருக்கு 16 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவின்படி மதுரை அரசு போக்குவரத்து கழக கோட்ட மேலாளர் நஷ்டஈடு வழங்காததால் மீண்டும் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் செந்தில் முத்து நிறைவேற்றுதல் மனுவினை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் மதுரை கோட்டத்திற்கு சொந்தமான 2 அரசு பேருந்துகளை ஜப்தி செய்ய அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்திற்கு சென்ற நீதிமன்ற ஊழியர்கள் அங்கு நின்று கொண்டிருந்த இரண்டு பேருந்துகளையும் ஜப்தி செய்து அதில் பயணித்த பயணிகளை மாற்று பேருந்தில் அனுப்பி வைத்துள்ளனர்.