தமிழகத்தின் குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் 1,500 ரூபாயும்,வருடத்தில் 6 சிலிண்டர்கள் இலவசமாகவும் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது.
அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைத்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த சில நாட்களாகவே அதிமுக பல்வேறு நலத் திட்டங்களை மக்களுக்கு தொடர்ந்து செய்து வருகிறது. மேலும் மக்களை கவரும் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இதனை அடுத்து ஒவ்வொரு கட்சியினரும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பற்றி தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் ஒவ்வொரு கட்சிக்கும் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி தொகுதி பங்கீடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் கூட்டாக பேட்டி அளித்தனர். அப்போது பேசிய முதல்வர் ஈபிஎஸ், ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் விலை இல்லாமல் வழங்கப்படும். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1500 ரூபாய் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.