காஞ்சிபுரத்தில் ஆவணம் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.2 லட்சத்து 31 ஆயிரம் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அனைத்து மாவட்டங்களிலும் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி காஞ்சிபுரத்தை அடுத்த சோதனை சாவடியில் தாசில்தார் அகிலா தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வாகன சோதனையில் சிறப்பு காவல் துறை துணை ஆய்வாளர் மகேந்திரன் உள்ளிட்ட பல காவல் துறையினரும் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு காஞ்சிபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
மேலும் அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த ஜெயக்குமார், சம்பத் ஆகிய இருவரிடமும் சோதனை மேற்கொண்டனர். அப்போது ரூபாய் 2 லட்சத்து 31 ஆயிரம் பணம் கொண்டு செல்வது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரிடமும் பறக்கும் படை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அந்த பணத்திற்கான உரிய ஆவணம் அவர்களிடம் இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் அந்த தொகையை பறிமுதல் செய்து ஆர்.டி.ஓ அலுவலகத்தில் உள்ள கருவூலத்தில் ஒப்படைத்துள்ளனர்.