பெரம்பலூரில் சட்டமன்ற தேர்தலையொட்டி கல்லூரி மாணவிகளுக்கு 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்று விழிப்புணர்வு முகாம் நடைபெற்றுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வேப்பூரில் வாக்காளர் விழிப்புணர்வு முகாம் பாரதிதாசன் மகளிர் கலைக்கல்லூரியில் நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் மீனா தலைமை தாங்கியுள்ளார். வரகூர் வருவாய் ஆய்வாளர் புஷ்பராணி, தேர்தல் துணை தாசில்தார் கீதா, கிராம நிர்வாக அலுவலர் சேஷாத்ரி ஆகியோர் வாக்களிப்பதற்கான அவசியம் குறித்து கல்லூரி மாணவர்களிடம் பேசினார்கள்.
மேலும் அனைவரும் அவசியம் வாக்களிக்க வேண்டும் என்றும், “எனது வாக்கு எனது உரிமை” என்றும் மாணவர்கள் கோலத்தை கல்லூரி வளாகத்தில் போட்டு, கோஷம் எழுப்பியுள்ளனர். வாக்காளர்களுக்கு சந்தேகம் ஏற்படும் வகையில் அதனை தீர்த்துக் கொள்வதற்காக 1950 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு எண் வடிவில் மாணவிகள் அமர்ந்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.