திண்டுக்கல்லில் தோட்டனூத்து கிராமத்தில் கோவில் திருவிழாவின்போது ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு அப்பகுதிமக்கள் மனு வழங்கியுள்ளனர்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வருகிறது. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம் திங்கட்கிழமை தோறும் நடைபெறும். அது சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு குறைதீர்க்கும் மனுக்களை பெறுவதற்காக நேற்று புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. அந்த புகார் பெட்டியில் தோட்டனூத்து கிராமத்திலிருந்து வந்த மக்கள் ஒரு மனுவை போட்டுள்ளனர்.
அந்த மனுவில் தோட்டனூத்தில் ஒவ்வொரு வருடமும் பகவதி அம்மன், மாரியம்மன், காளியம்மன் கோவில் திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். அதே போல் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ம் தேதி இந்த வருடத்திற்கான திருவிழா தொடங்கவுள்ளது. அதனை முன்னிட்டு 8-ம் தேதி அரசு அறிவித்த விதிமுறைப்படி ஜல்லிக்கட்டு நடத்த முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். அதற்கு மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்க வேண்டும் என்றும் அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.