காஞ்சிபுரத்தில் வீட்டை அபகரிக்க முடியாத கோபத்தில் மூதாட்டியை கிரைண்டர் கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்தவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெரியார் நகர் பகுதியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவர் மூலிகை மருந்து மூலம் தீராத வியாதிகளுக்கு மருத்துவம் செய்துவரும் அகத்தியலிங்கம் என்பவரிடம் உதவியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். அகத்திலகத்திற்கு மலர்கொடி என்ற மனைவி இருந்தார். அகத்திலகத்திற்கும், மலர்கொடிக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பல வருடங்களாக அவர்கள் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில் அகத்திலகம் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இதையடுத்து அவருடைய வீட்டை மணி பராமரித்து வந்துள்ளார். இதை அறிந்த மலர்கொடி சில மாதங்களுக்கு முன்பு ரூ.25 லட்சம் பணத்திற்கு வீட்டை விற்றுள்ளார்.
இதன் காரணமாக மலர்கொடிக்கும், மணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வீட்டை வாங்கியவர்கள் வீட்டை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். மலர்கொடி அந்த வீட்டில் தற்காலிகமாக தங்கியுள்ளார். வீட்டை அபகரிக்க முடியாத கோபத்தில் இருந்த மணி மதுபோதையில் தூக்கத்தில் இருந்த மலர் கொடியின் தலையில் கிரைண்டர் கல்லை தூக்கி போட்டு கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மூதாட்டியின் உடலை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் மணி மீது வழக்குப்பதிந்து பின் கைது செய்துள்ளனர்.