வேதாரண்யத்தில் அரியவகை இனமான ஆலிவர் ரெட்லி ஆமைகள் இறந்து கரை ஒதுங்குவது இயற்கை ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை அரிய வகையான ஆலிவர் ரெட்லி ஆமைகள் கடற்கரையோர பகுதிகளுக்கு வந்து குழி தோண்டி முட்டையிட்டு செல்லும். இந்த ஆலிவ் ரிட்லி ஆமைகளின் ஆயுட்காலம் 400 வருடங்கள் ஆகும். ஆலிவர் ரெட்லி ஆமைகள் முட்டை இடுவதற்காக கடற்கரைக்கு, நடுகடலில் இருந்து வரும்போது கப்பல்களிலும், மீன்பிடி படகு என்ஜின் விசிறியில் அடிபட்டும், மீனவர்களின் வலையில் சிக்கியும் உயிர் இழந்து வருகின்றது. 75 கிலோ முதல் 100 கிலோ எடையுள்ள ஆலிவர் ரெட்லி ஆமைகள் வேதாரண்யம் பகுதியில் 100-க்கும் மேல் இந்த சீசன் காலத்தில் இறந்து கரை ஒதுங்கியுள்ளது.
இறந்து கரை ஒதுங்கிய ஆமைகளை கடற்கரையில் கோடியக்கரை வனத்துறையினர் புதைத்து வருகின்றனர். இந்த நிலையில் வேதாரண்யம் அருகே உள்ள மணியன்தீவு கடற்கரை பகுதியில் நேற்று 50 கிலோ எடை உள்ள ஆலிவர் ரெட்லி ஆமைகள் இறந்து கரை ஒதுங்கியுள்ளது. இது குறித்து தகவலறிந்து வந்த கோடியக்கரை வனவர் சதீஷ்குமார், வனச்சரகர் அயூப்கான் மற்றும் வனத்துறையினர் ஆமையை மீட்டு கடற்கரையில் புதைத்துள்ளனர். அழிந்து வரும் அரியவகை இனமான ஆலிவர் ரெட்லி ஆமைகள் வேதாரண்ய கடற்கரையில் இறந்து கரை ஒதுங்குவது இயற்கை ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.