அமெரிக்காவின் முக்கிய துறைகளில் கம்ப்யுட்டர் ஹேக்கர்கள் ஊடுருவிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் அரசின் முக்கிய துறைகளான பாதுகாப்பு, உள்நாட்டு பாதுகாப்பு, நிதி மற்றும் வணிகம் போன்ற ஒன்பது அரசுத்துறைகள் மற்றும் மைக்ரோசாப்ட் உள்பட 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் மீது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் கம்ப்யூட்டர் ஹேக்கர்கள் ஊடுருவி உளவு பார்த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த சோலார் விண்ட்ஸ் என்கிற ஐடி நிறுவனத்தில் நெட்வொர்க் மேனேஜ்மெண்ட் மென்பொருளை பயன்படுத்தி தான் இந்த சைபர் தாக்குதல் நடைபெற்றது என்றும், அமெரிக்காவில் உள்ள முக்கிய துறைகளின் கம்ப்யூட்டர்களில் நுழைந்ததாக அமெரிக்கா பாதுகாப்பு மையம் கூறியுள்ளது.மேலும் இந்த சம்பவத்தின் பின்னணியில் ரஷ்யா இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபையில் கடந்த மாதம் நடைபெற்ற விசாரணையின்போது , இந்த சைபர் தாக்குதலின் பின்னணியில் ரஷ்யாவின் உளவுத்துறை இருப்பதற்கான முழு ஆதாரங்கள் இருப்பதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைவர் பிராட் ஸ்மித் கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டையும் ரஷ்யா மறுத்துள்ளது.
மேலும் சைபர் தாக்குதல் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியதாவது, தனது நிர்வாகத்தில் சைபர் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கப்படும். சைபர் தாக்குதல் நடத்தும் எதிரிகளை முதலில் நாம் தடுக்க வேண்டும். நம் நட்பு நாடுகள் மற்றும் கூட்டாளிகள் சேர்ந்து இது போன்ற தீங்கிழைக்கும் தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது தண்டனைகள் வழங்க வேண்டும். மேலும் இவ்விவகாரத்தில் ரஷ்யா மீது வலுவான பொருளாதார தடைகளை விதிக்க வேண்டுமென முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது.