தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனக்கு சீட் ஒதுக்கவில்லை எனக்கூறி திமுகவுக்கு கொடுத்த ஆதரவை கருணாஸ் சற்றுமுன் வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை தீவிரமாக நடந்து வருகிறது. அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில் நடிகர் கருணாஸ் முக்குலத்தோர் புலிப்படை கட்சி என்ற புதிய கட்சியைத் தொடங்கினார்.
அவர் கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட திருவாடானை தொகுதியில் வெற்றி கண்டார். ஆனால் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் தங்களுடைய கட்சிக்கு அதிமுக தாங்கள் கேட்ட தொகுதி ஒதுக்காததால், அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அப்போது திமுக கூட்டணியில் அவர் இணைவார் என்று தகவல் வெளியான நிலையில், தற்போது திமுகவிற்கு ஆதரவு அளிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக ஆர் எஸ்.பாரதியிடம் முக்குலத்தோர் புலிப்படை இளைஞரணி செயலாளர் கடிதம் அளித்துள்ளார். ஏற்கனவே தேர்தலில் அதிமுக தோல்வி அடைவதற்கான வேலைகளை பார்ப்போம் என கருணாஸ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அதிமுக மீது கடுமையான விமர்சனம் வைத்த கருணாஸ் வான்ட்டாக சென்று திமுகவுக்கு ஆதரவு அளித்த நிலையில், தனக்கு சீட் ஒதுக்கவில்லை எனக்கூறி திமுகவுக்கு கொடுத்த ஆதரவை வாபஸ் பெறுவதாக சற்றுமுன் அறிவித்துள்ளார். கருணாசை தொடர்ந்து திமுகவுக்கு கொடுத்த ஆதரவை திரும்பப் பெறுவதாக தமிமுன் அன்சாரியும் அறிவித்ததால் அரசியலில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.