Categories
அரசியல் ஈரோடு மாவட்ட செய்திகள்

மொடக்குறிச்சி சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ?

இந்திய தேர்தல் வரலாற்றிலேயே அதிக வேட்பாளர்களை  களம் கொண்ட தொகுதி மொடக்குறிச்சியாகும். தேர்தல் சீர்திருத்தத்திற்கு காரணமாக அமைந்ததும் இந்த தொகுதிதான். நதிகள் இணைப்பு விளைபொருள்களுக்கு உரிய விலை நிர்ணயம் போன்ற விவசாயிகளின் கோரிக்கைகளை முன்னிறுத்தி 1996 ஆம் ஆண்டு 1,033 வேட்பாளர்கள் போட்டியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய தொகுதி மொடக்குறிச்சியாகும்.

கொடுமுடி, சிவகிரி, அர்ச்சலூர், பாசூர், அவல்பூந்துறை உள்ளிட்ட பகுதிகளை கொண்ட மொடக்குறிச்சி தொகுதியில் விவசாயமே பிரதான தொழில். கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில், 730 ஆண்டுகள் பழமை வாய்ந்த காலிங்கராயன் கால்வாய், சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை வாழ்ந்த இடம் இந்த தொகுதியின் முக்கிய அடையாளங்கள். 1967 முதல் இதுவரை நடந்த தேர்தல்களில் அதிமுக 7 முறையும் திமுக 3 முறையும் திமுக கூட்டணியில் இருந்த சம்யுத்த சோசலிஸ்ட் கட்சி ஒருமுறையும் காங்கிரஸ் ஒரு முறையும் வென்றுள்ளன.

கடைசியாக 2016 தேர்தலில் களமிறங்கிய வேட்பாளர்களில் அதிமுகவைச் சேர்ந்த வி.பி. சிவசுப்பிரமணி எம்.எல்.ஏவானார். மொடக்குறிச்சி தொகுதியின் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2,33,163 ஆகும். மூன்றாம் பாலினத்தவர்கள் 19 பேர் ஆகும். காலிங்கராயன் மற்றும் கீழ்பவானி கால்வாய்கல்  மூலம் பாசனம் பெரும் இத்தொகுதியில் நீர் மேலாண்மை விவசாயம் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்காதது போன்றவை முக்கிய பிரச்சினைகளாக உள்ளன.

இந்த தொகுதியில் பிரதான விவசாயமாக மஞ்சள் சாகுபடி உள்ளது. இதற்கு கட்டுப்படியான விலை கடந்த சில ஆண்டுகளாகவே கிடைப்பது இல்லை. ஈரோடு மாவட்டத்தில் சாய தோல் ஆலை கழிவுகளால் அதிகம் பாதிக்கப்படுவது இந்த தொகுதியில் உள்ள காலிங்கராயன் பாசன பகுதி விவசாயிகளே. நச்சுத்தன்மை வாய்ந்த ரசாயன கழிவுகளால் மண்வளம் பாதிப்பதுடன் வயல்களில் வேலை செய்யும் விவசாயிகளுக்கு கை கால்களில் ஏற்படும் பாதிப்புகளும் அதிகம்.

தொகுதியில் மொடக்குறிச்சி கொடுமுடி என இரு வட்டங்கள் பிரிக்கப்பட்ட போதிலும் அதற்கான கட்டமைப்பு வசதிகள் செய்யப்படவில்லை. தொகுதிக்குட்பட்ட கொடுமுடி ஆன்மிக தலமாக உள்ளது. பக்தர்களுக்கு போதுமான அடிப்படை வசதிகளும், பேருந்து நிலையம் போன்ற மேம்படுத்தப்பட்ட கட்டமைப்பு கோரிக்கைகளும் இன்னும் நிலுவையிலேயே உள்ளன. வெற்றி பெற்றால் தாலுகா அளவில் இரண்டு இடங்களில் அலுவலகம் அமைத்து மக்களை சந்தித்து குறை கேட்பதாக உறுதியளித்திருந்தார் தொகுதி தற்போதைய அதிமுக எம்.எல்.ஏ சிவசுப்பிரமணியம்.

ஆனால் வெற்றி பெற்ற பின் மொடக்குறிச்சி உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் அலுவக அலுவலகத்தை திறப்பது இல்லை என்பது குற்றச்சாட்டு வாக்குறுதி என்ன ஆனது என்ற கேள்விக்கு தொகுதி எம்எல்ஏ விடம் பதில் இல்லை. 1996 ஆம் ஆண்டு தேர்தலில் உலக சாதனை படைத்து ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்த மொடக்குறிச்சி தொகுதியின் மக்கள் தங்களின் அடுத்த பிரதிநிதியை தேர்ந்தெடுக்க கோரிக்கைகளுடன் காத்திருக்கிறார்கள்.

Categories

Tech |