Categories
அரசியல் ஈரோடு மாவட்ட செய்திகள்

பவானி சட்ட மன்ற தொகுதி: மக்களின் எதிர்பார்ப்புகளும், பிரச்சனைகளும்…!!!

தமிழகத்தில் கைத்தறி ஜமுக்காள தொழிலிலும் ஆன்மீகமும் கலந்து புகழ் பெற்றது தான் இந்த பவானி சட்டமன்ற தொகுதி. பவானியை பொறுத்தவரை பவானி ஆறு, காவிரி ஆறு ஓடுவதால் முக்கிய தொழிலாக உள்ளது. விவசாயத்திற்கு அடுத்தபடியாக கைத்தறி தொழில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புவரை முக்கிய தொழிலாக இருந்துவந்தது. கூடுதுறை பவானி, சங்கமேஸ்வரர் கோவில் தொகுதியின் முக்கிய அடையாளங்கள்.

செல்லியாண்டி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாவில் பக்தர்களே  கருவறை சென்று மூலவருக்கு புனித நீர் ஊற்றி வழிபடுவது வேறு எங்கும் இல்லாத ஒன்று. 1952 ஆண்டு முதல் நடைபெற்ற தேர்தல்களில் இதுவரை காங்கிரஸ் கட்சி 3முறையும்,  அதிமுக 7 முறையும் வென்றுள்ளனர். திமுக 2முறையும், தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் பாமக 1முறையும் வெற்றி பெற்றன. சுயேச்சை வேட்பாளர் ஒருமுறை வாகை சூடி இருக்கிறார்.

பவானி தொகுதியில் மொத்தம் 2,36,008 வாக்காளர்கள் உள்ளனர். இந்த தொகுதியிலும் பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர். பவானியில் உற்பத்தி செய்யப்படும் ஜமுக்காளம் உலக அளவில் புகழ் பெற்றதாக விளங்கியது. கைத்தறி மூலம் ஜமுக்காளம், போர்வைகள் தயாரிக்கப்பட்டு அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. நாளடைவில் விசைத்தறியின் வரவுடன் கைத்தறி தொழிலுக்கு அரசு அறிவித்த தள்ளுபடி மானிய தொகையும் கிடைக்காததால் பாதிப்புக்கு உண்டான பலரும் தொழிலை கைவிட்டுள்ளனர்.

வேளாண்மை,கைத்தறி, ஆன்மீகம் என கலந்து காணப்படும் பவானியில் இதுவரை தீர்க்கப்படாத மக்கள் பிரச்சினைகள் ஏராளம். பவானி மற்றும் காவிரி ஆற்றில் மணல் திருட்டை தடுத்திட வேண்டும். சாயக் கழிவுநீர் கலக்காத நீர் வேண்டும். பவானி கூடுதுறையை சுற்றுலா மையமாக்க வேண்டும். உயர் மின்னழுத்த கோபுரங்களை வேளாண் நிலத்தில் அமைக்கக்கூடாது. கட்டை பை தயாரிப்புக்கு  இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என தொகுதி மக்கள் கோரிக்கை மிகப்பெரியது.

சுற்றுச்சூழல் பாதிப்புகளிலிருந்து மீள  பவானி சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என்று அளிக்கப்பட்ட வாக்குறுதியை வரும் தேர்தலுக்கு பிறகாவது நிறைவேற்றவேண்டும் என்பது தொகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. நெரிஞ்சி பேட்டை படகுத்துறையை சுற்றுலா மையமாக மாற்ற வேண்டும் என்பதும் அவர்களின் கோரிக்கையாகும். இப்படி பல்வேறு கோரிக்கைகளுடன் சட்டமன்ற தேர்தலை பவானி தொகுதி மக்கள் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

Categories

Tech |