Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

திருவிழாவிற்கு சென்ற குடும்பம்… வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி … மயிலாடுதுறையில் பரபரப்பு ..!!

மயிலாடுதுறையில் வீட்டின் கதவை உடைத்து ரூ.8 லட்சம் மற்றும் 100 பவுன் நகை ஆகியவற்றை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள செம்பனார்கோவில் பகுதியில் சாந்தகுமார் என்பவர் வசித்துபிவருகிறார். இவர் எஞ்சினியராக வெளிநாட்டில் சென்ற 30 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ராஜேஷ்வரி என்ற மனைவியும், சிவானி, சௌமியா என்ற மகள்களும் உள்ளனர். சாந்தகுமார் வெளிநாட்டில் வேலை பார்ப்பதால் ராஜேஸ்வரி தனது மகள்களுடன் விளநகர் கிராமத்தில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இரண்டு மாதத்தில் மூத்த மகள் சவுமியாவிற்கு திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதற்காக ராஜேஸ்வரி 100 பவுன் நகை மற்றும் ரூபாய் 8 லட்சம் ஆகியவற்றை வங்கியிலிருந்து மீட்டு வீட்டில் பாதுகாப்பாக வைத்துள்ளார். இந்நிலையில் சென்ற ஞாயிற்றுக்கிழமை அன்று கோவில் திருவிழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக திருவெண்காட்டிற்கு ராஜேஸ்வரியும், அவரது மகள்களும் சென்றுள்ளனர். ராஜேஸ்வரி வீட்டை பூட்டி விட்டு உறவினர் ஒருவரின் வீட்டில் தங்கி விழாவில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார்.

அதன்பின் திங்கட்கிழமை அன்று காலையில் ராஜேஸ்வரி வீடு திரும்பியுள்ளார். அங்கு வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் அவர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்தனர். அங்கு பீரோவின் கதவுகள், பொருட்கள் மற்றும் துணி, மணிகள் ஆகியவை சிதறிக் கிடந்ததை கண்டு பதற்றம் அடைந்தனர். இதையடுத்து ராஜேஸ்வரி பீரோவில் இருந்த நகை பெட்டியை திறந்து பார்த்துள்ளார். அப்போது திருமணத்திற்காக வைத்திருந்த வளையல், சங்கிலி, மோதிரம் ஆகிய 100 பவுன் நகைகள் மற்றும் ரூபாய் 8 லட்சம் ஆகியவை காணாமல் போனது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் ராஜேஸ்வரி புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் நகை பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |