1952ஆம் ஆண்டு முதல் இதுவரையில் 15 சட்டமன்ற தேர்தலை சந்தித்த ஆரணி தொகுதியில் திமுக, அதிமுக என மாறி மாறி வெற்றி கண்டுள்ளன. இதுவரை திமுக 5 முறையும், அதிமுக 6 முறையும், காங்கிரஸ் 2 முறையும், பொதுநல கட்சியும், தேமுதிகவும் தலா 1முறையும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த 2016 தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சேவூர் ராமச்சந்திரன் வெற்றி பெற்றார். ஆரணி தொகுதியில் மொத்தம் 2,69,300 வாக்காளர்கள் உள்ளனர்.
இதில் பெண் வாக்காளர்கள் அதிகம். ஆரணியில் முக்கிய தொழிலாக பட்டும், அரிசி உற்பத்தியும் விளங்கி வருகின்றன. ஆரணியில் தயாரிக்கப்படும் கைத்தறி பட்டு சிறப்பு வாய்ந்தது. ஆரணியில் உற்பத்தி செய்யப்படும் அரிசி மற்ற நகரங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. பெரிய நகரமாக இருக்கும் ஆரணியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்பது தொகுதி மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாகும்.
ஆரணியில் அரிசி உற்பத்தி பூங்கா அமைக்க வேண்டும், நெல் ஆராய்ச்சி மையம் தேவை, ஆரணியில் பட்டு பூங்கா அமைக்க வேண்டும், அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என தொகுதி மக்கள் கோரிக்கைகளை அடுக்குகின்றனர். 1600 ஆம் ஆண்டு ஆற்காடு மன்னர்களால் உருவாக்கப்பட்ட சத்திய விஜயநகரம் கிராமத்தில் உள்ள அரண்மனையையும், பூசிமலைக்குப்பம் கிராமத்தில் உள்ள கண்ணாடி மாளிகையையும் புராதன சின்னங்களாக பாதுகாக்க வேண்டும்.
மாணவர்களின் நலன் கருதி ஆரணியில் அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். தொகுதி மக்களின் கோரிக்கைகளை வரை நிறைவேற்றி இருப்பதாக சட்ட மன்ற உறுப்பினரும், அமைச்சருமான சேவூர் ராமச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார். ஆரணியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை பல ஆண்டுகளாக கிடப்பில் இருக்கிறது.
கிடப்பில் போடப்பட்ட திண்டிவனம் நகர ரயில் பாதை திட்டத்தை நிறைவேற்றவேண்டும். ஆரணியை தலைமையிடமாகக் கொண்டு தனி சுகாதார மாவட்டம் மூடப்பட்ட கிளை சிறைச்சாலையை புதுப்பித்து மீண்டும் திறக்க வேண்டும் என மக்களின் கோரிக்கை நீள்கிறது. இனி வரும் ஆண்டிலாவது தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்பதே ஆரணி தொகுதி மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது